அருள்மிகு பவானி அம்மன், அருள்மிகு காமாட்சி அம்பிகா உடனுறை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் நமது கொளத்தூர் டீச்சர்ஸ் காலனி, நான்காம் மனைப்பிரிவு பகுதியில் பஸ்நிலையம் அருகில் அமைந்துள்ள திருத்தலம் ஆகும.
பழைய மற்றும் புதிய லட்சுமிபுரம் மக்கள், விவேகானந்தா நகர், ஹுசைன் காலனி மற்றும் அவற்றை சுற்றியுள்ள புதியதாக உருவாகியிருக்கும் நகர் மக்கள் பலருக்கும் இஷ்ட தெய்வமாக அருள்பாலித்து வருகிறது இத்திருக்கோயில்.
கடந்த 1985ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி சிறிய சன்னதியாக உருப்பெற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் உதவிக்கரம் நீட்டி இக்கோயிலின் நிர்வாகக் குழுவால் பல கட்டங்களில் திருப்பணிகள் நடைபெற்றன. 2006ம் ஆண்டு பொறுப்பேற்ற நிர்வாகக் குழுவால் இத்திருக்கோயில் ஆகமவிதிப்படி பல மாற்றங்களும், பல்வேறு சன்னதிகளும், மண்டபங்களும், பிரவார தெய்வங்களின் சன்னதிகளும், அருள்மிகு பவானி அம்மன் நுழைவு வாயிற்படிக்கு முன் துவார பாலக சக்திகளும் நுழைவு வாயிலின் மேற்புரம் கஜலட்சுமி திருவுருவமும் அமைக்கப்பெற்று, இக்கோயில் தற்சமயம் ஒரு கம்பீரத் தோற்றத்தை தருகிறது.
இத்திருப்பணிகள் அனைத்துமே அன்னை பவானி அம்மனின் அருளாசியால், இப்பிறவியின் பாக்கியமாகக் கொண்டு பல விதங்களில் உதவிய மெய்யடியர்களுக்கும், நிர்வாகக் குழுவுக்குமே தற்சமய கம்பீரத் தோற்றத்திற்கு காரணமானவர்கள் என்றால் அது மிகையாகாது.
ஸ்தலபுராணம்
கடந்த 20.01.1985 அமாவாசை ஞாயிறன்று வெளிப்புறத்தில் துப்புரவு செய்து கொண்டிருந்த சமயம் ஒரு நல்ல பாம்பு தோன்றி நெளிந்து நெளிந்து தற்போதுள்ள கோயில் இடத்தில் உள்ள கற்குவியலுக்குள் ஓடி ஒளிந்து விட்டது. நல்ல பாம்பை அடிப்பதற்காக முயற்சி செய்த போது, அவர்களுடன் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண் அம்மன் அருள் வந்து ஆட ஆரம்பித்து, “நான் பவானி வந்திருக்கிறேன் என்னை அடிக்காதீர்கள் எனக்கு ஒரு இடம் அமைத்துக் கொடுங்கள், நான் இங்குள்ள அனைவரையும் பாதுகாத்து நன்றாக வாழ அருள்புரிகிறேன்” என்று அப்பெண்ணின் மூலமாக அருள்தந்து மறைந்து விட்டாள்.
இத்திருக்கோயிலில் அருள்மிகு பவானி அம்மனை பிரதிஷ்டை செய்வதற்கு முன் காஞ்சி மகாப் பெரியர்களிடமும் அருளாசி பெற்று, அவர் அனுப்பிவைத்த மடத்திலிருந்து வந்தவரின் ஆலோசனையுடன் அனேக பக்தர்களின் உதவியுடன் வேலைகளை நிறைவேற்றி, ஸ்வஸ்திஸ்ரீ பிரோஜ்பத்தி வருடம் சித்திரை மாதம் 22ம் நாள் ஞாயிற்றுக்கிழமை உத்திராடம் நட்சத்திரத்தில் (05.05.1991) காலை 10.30 மணிக்குமேல் 11.15 மணிக்குள் தெய்வங்கள் பிரதிஷ்டையும், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமும் அனைத்து பக்த கோடிகள் பிரார்த்தனையும் சிறப்பாக நடைபெற்றது.
ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் உத்திராட நட்சத்திரதினத்தன்று அம்மன் வீதி உலா வந்து அனைவரையும் அருள் பாலித்து வருகிறாள். இது பத்து நாட்கள் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. அதே போன்று, தீபாவளிக்கு மறுநாள் பிரதமையிலிருந்து சஷ்டிவரை ஆறு நாட்களும் கந்த சஷ்டி விழாவும், 7ம் நாள் ஸ்ரீவள்ளி தேவயானை ஸமேத சுப்ரமணியருக்கு திருக்கல்யாண உற்சவமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
11.07.1993 அன்று ஸ்ரீ ஆஞ்சநேயர், நவக்கிரகங்களுக்கு தனிச் சன்னதிகள் அமைந்து முறைப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது. முதல் இரண்டு ஆண்டுகள் அம்மனை சூலத்தில் எழுந்தருளச் செய்து வீதி உலா நடைபெற்றது. மூன்றாம் ஆண்டு உற்சவமூர்த்திகள் செய்யப்பட்டு ஸ்வஸ்திஸ்ரீ பவ வருஷம் சித்திரை மாதம் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 24.04.1994 அன்று முறைப்படி யாகசாலை அமைத்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னர் உற்சவ மூர்த்தி அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடைபெற்று வருகிறது.
மங்களகரமான விரோத ஆண்டு ஆவணி 14ம் நாள் 30.08.2009 ஞாயிற்றுக்கிழமை வர்ண கலாபங்கள் சிற்ப சாஸ்திர சிவாகம முறைப்படி செய்யப்பட்டு ஜுரோணத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீபவானி அம்மனின் அருளால் காடாகக் கிடந்து சுற்றுப்புற இடங்கள் அனைத்தும் நகர்புறங்களாக மாறிவிட்டன என்றால் மிகையாகாது.
உள்ளும் புறமும் நமக்குத் துணையாக நிற்கும் ஆண்டவனின் பெருமை வாய்ந்த அதிலும் நமக்கு மிக அருகிலேயே அமைந்துள்ள அருள்மிகு பவானி அம்மன், அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரத் திருக்கோயிலைப் பற்றி, நான் எழுதியுள்ள இப்பகுதியை படிப்பவர்கள் அனைவரும் நல்லவனெல்லாம் பெறுவர் என்பது என் உறுதியான அசைக்க முடியாத நம்பிக்கை.
ஜுன் 2016 இதழில் வெளிவந்த கட்டுரை

கட்டுரையாளர் ஜோதிட சக்ரவர்த்தி நடேச நாராயணன்