கொளத்தூரைச் சேர்ந்தவர்கள் இங்கு தாங்கள் வாழ்ந்த, வளர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் பகுதி இது. உங்களுக்கும் கொளத்தூருடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் பிணைப்பு இருக்கிறதா..? அதை நம் பகுதி மக்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பமா..? கொளத்தூர் மெயிலை அழையுங்கள்!
நானும் கொளத்தூரும் 2
திரு.தாரகராமன், ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர்
சீனிவாசா நகர், கொளத்தூர்
எனது 16வது வயதில், 1966ல் நாங்கள் பெரவள்ளூரில் இருந்து கொளத்தூர் சீனிவாசா நகருக்கு குடும்பத்துடன் வந்தோம். இங்கு நாங்கள் மூன்றாவது வீடு. இந்த பகுதி பனந்தோப்பாக அப்போது இருந்தது. பச்சையப்பன் கல்லூரி பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி படித்த பின்னர் 1970ல் போஸ்ட் ஆபிஸில் போஸ்ட் மேனாக பணியில் சேர்ந்தேன். தற்போது 2010ல் போஸ்ட் மாஸ்டராக பணி ஓய்வு பெற்று இலவச திருமண தகவல் மையம் ஒன்றை நடத்தி வருகிறேன். மேலும் சீனிவாசா நகரில் உள்ள கன்னியம்மன் கோவிலில் நிர்வாக குழுவில் உறுப்பினராக உள்ளேன்.
நான் குடியேறியபொழுது கொளத்தூர் வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபொழுதுதான் சென்னை மாநகராட்சியுடன் நம் பகுதி இணைக்கப்பட்டது. அதற்கு முன்னர் ஊராட்சி ஒன்றியமாக இருந்தது. அப்பொழுது அமரர் ராகவன் நாயுடு (கங்கா தியேட்டர் உரிமையாளர்) தலைவராக இருந்தார்.
முன்னர் ஐசிஎப் பூம்புகார் நகர் வழியாக ஒரேயொரு பஸ் மட்டுமே இயங்கியது. போதுமான மருத்துவ வசதிகளும் அப்பொழுது கிடையாது. தற்போது நாதமுனி தியேட்டர் அருகேயிருக்கும் மருத்துவர் காந்திராஜ் மட்டுமே அப்பொழுது எங்களுக்கான டாக்டராக இருந்தார்.
முன்பு திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியாக இருந்தது, பின்னர் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியாக மாறி தற்போது கொளத்தூர் தொகுதியாக உருப்பெற்று நல்ல நிலையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
1981ல் எனக்கு திருமணம் ஆனது. இப்பொழுது எனது மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன்கள் நல்ல நிலையில் இருக்கின்றனர். இத்தனை ஆண்டுகளில் நல்ல வாழ்க்கையும் முன்னேறிய நிலையில் குடும்பமும் இருப்பதற்கு கொளத்தூரும் ஒரு காரணம்.
நகரின் பிற பகுதிகளை ஒப்பிடுகையில் நமது கொளத்தூரில் காணக்கிடைக்கும் அமைதியான சூழல் நமக்கு வரம் ஆகும்.
ஜனவரி 2016 இதழில் வெளிவந்த கட்டுரை
tags : Srinivasa Nagar, Kolathur, Saloon, Interview, My Story, Nanum Kolathurum