நமது பகுதியில் உள்ள அனைத்து சமய வழிபாட்டுத் தலங்கள் குறித்து அறிவோம் வாருங்கள்!
அருள்மிகு தேவிபாலியம்மன் திருக்கோயில் - வில்லிவாக்கம்
அருள்மிகு ஸ்ரீதேவி பாலியம்மன் ஆலயம் கொன்னூர் என்று அழைக்கப்படும் வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சுமார் 600 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது.
இதன் அருகாமையில் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயமும், சௌமிய தாமோதர பெருமாள் ஆலயமும் உள்ளது. இதுவும் மிகவும் பழமையானது.
இந்த ஆலயத்தை சுற்றி வடக்கே அருள்மிகு இளங்காளியம்மனும், மேற்கே அருள்மிகு மொப்பிலி அம்மனும், கிழக்கே திருவீதி அம்மனும், தெற்கே தான்தோன்றி அம்மனும், கொளத்தூர் சீனிவாசா நகரில் அருள்மிகு கன்னியம்மன் ஆலயமும் அமைந்துள்ளது.
கோவில் அமைப்பு
ஸ்ரீ பாலியம்மன் ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சுற்றுச்சுவர் வெளிவாசல் முகப்பு மண்டபம் மேலே இருபக்கமும் மலர் ஏந்தி இரு இளம் பெண்கள் இடையில் ஐந்து தலை நாக குடையாக அம்மன் நான்கு கரத்தினை கொண்டு காட்சி தருகிறாள்.
ஸ்தல வரலாறு
வில்லிவராண்யம் என்னும் வில்லிவாக்கம் ஸ்ரீ பாலியம்மன் திருக்கோயில் மாபெரும் அக்னிஷேத்திரம் ஆகும். இதில் மூர்த்தி, தீர்த்தம், விருட்சம் ஆகியவை இப்பகுதியில் மிகவும் புகழ் பெற்றவை.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நமது புகழ்பெற்ற வில்லிவாக்கம் ஏரிக்கரையில் அழகுருவான பெண் ஒருவர் வேம்பு மரத்தடியில் நின்று அவ்வழியே சென்றவர்களிடம், என் உடல் எரிச்சலைடைகிறது, இந்த ஏரியிலிருந்து நீர் எடுத்து எனக்கு அபிஷேகம் செய்யுங்கள் என்றார்.
இதனைக் கேட்டு அங்கு கூடியிருந்த பெண்கள், ஏரி நீரைக் கொண்டு வந்து அபிஷேகம் செய்தனர். அதன் பின்னர் தெய்வீக களையுடன் காட்சியளித்த அந்த பெண் சாந்தியடைந்தார். எனது முற்பிறவு ரேணுகா பரமேஸ்வரி என்பதாகும். இப்பொழுது பாலி என்றழையுங்கள், நான் இளைப்பாற கோயில் ஒன்று கட்டித் தாருங்கள் என்று கூறி மறைந்தாள் என்பது ஐதீகம்.
இதன்பின்னர் சிலகாலம் சென்றபிறகு மக்களால் சிறிய கோயில் ஒன்று கட்டப்பட்டு அன்னை ஸ்ரீ பாலி பூஜிக்கப்பட்டு வந்தார். இந்த ஊர் பேரூராக மாறிய காலத்தில் மிக பிரமாதமான அளவில் பெரியதோர் ஆலயத்தை நிர்மாணித்து சகல வசதிகளுடன் ஆகம வதிகளுடன் அன்னை ஸ்ரீ பாலி பூஜிக்கப்பட்டு வருகிறார்.