நானும் கொளத்தூரும் - திருமதி.கல்யாணி ஜெயகிருஷ்ணன், செந்தில் நகர்

கொளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சார்ந்தவர்கள்  இங்கு தாங்கள் வாழ்ந்த வளர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் பகுதி இது. உங்களுக்கும் கொளத்தூருடன் இருக்கும் பிணைப்பை பகிர்ந்து கொள்ள விருப்பமா... எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் 99624 55494.

திருமதி.கல்யாணி ஜெயகிருஷ்ணன், செந்தில் நகர்

கடந்த 1971ம் ஆண்டு முதல் இங்கு, கொளத்தூர் செந்தில் நகரில் வசித்து வருகிறேன். நான் பிறந்தது ஸ்ரீபெரும்புதூரில். பி.ஏ.எம்.எட் பட்டதாரி. சௌகார்பேட்டை பிரம்ம சமாஜம் பள்ளியில் 1969 முதல் 2008 வரை 40 ஆண்டு காலம் ஆசிரியையாக பணியாற்றி உள்ளேன். 1971ல் எனக்கு திருமணம் ஆனது. அப்பொழுதெல்லாம் இந்த பகுதி கல்லும், முள்ளும், களிமண்ணுமாய் இருக்கும்.நாங்கள் இங்கு வந்து குடியேறிய புதியதில் மின்சாரம் இல்லாமல் மண்ணெண்ணெய் விளக்குகள் துணையுடன் வாழ்ந்த நாட்கள் ஏராளம். சாலை வசதிகளும் இல்லாத நிலை இருந்தது. தினமும் வேலைக்கு செல்ல, செந்தில் நகரில் இருந்து வில்லிவாக்கம் ரயில்வே ஸ்டேஷன் வரை நடந்தே செல்லுவோம். போகும் பொழுது கையில் சாப்பாட்டுப் பையும், இங்கு கடைகள் எதுவும் இல்லாததால் திரும்பி வரும்பொழுது கையில் காய்கறிப் பையும் இருக்கும். இப்படி நடையோ நடை என நடந்து நடந்து அலுத்துவிட்டது. மழைக் காலங்களில் இன்னமும் கடினமான நிலை. முட்டி அளவு தண்ணீரில் கையில் செருப்பு, மாற்று உடைகள் என எடுத்துக் கொண்டு பணிக்கு நடந்து செல்ல வேண்டும். அன்று கடைகள் எதுவும் இல்லாத நிலையில் இருந்து இன்று இங்கு இல்லாதது எதுவும் இல்லை எனும் நிலையில் கொளத்தூர் வளர்ந்து நிற்பதைப் பார்க்க ஆனந்தமாக உள்ளது-. பக்தி மார்க்கத்திற்கு கோயில் முதல் பொழுது போக்கிற்கு திரையரங்கம் வரை இன்று இருக்கிறது. இன்று எனது மகன், மருமகள், பேரன், பேத்தி என நிறைவாய் வாழ்ந்து வருகிறேன். கடின காலங்களில் இருந்த கணவர், கொளத்தூரின் இன்றைய வளர்ந்த நிலையை காண உடன் இல்லையே என்பது மட்டும் குறையாக உள்ளது.இளைய தலைமுறைக்கு நான் கூறும் செய்தி, வருமானத்திற்கேற்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே.


Nanum Kolathurum - Mrs.Kalyani Jayakrishnan, Senthil Nagar, Kolathur
Shares her relationship with Kolathur Since 1970s