கொளத்தூர் கதைகள் - மனிதம் மதிப்போம் அர்ச்சனா






கொளத்தூர் மெயில் வாசகர்களுக்கு வணக்கம். என் பெயர் அர்ச்சனா. வில்லிவாக்கத்தில் பிறந்து வளர்ந்தேன். சிறு வயதில் முதல் நான் கஷ்டப்பட்டு வளர்ந்த காரணத்தால், இன்று பிறருக்கு உதவும் நோக்கில் மனிதம் மதிப்போம் எனும் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து அதன் மூலமாக சாலையோரம் காணப்படும் ஏழை எளிய மக்கள், ஆதரவற்றோர்களுக்கு, முதியவர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு தினம்தோறும் சுமார் 150 பேருக்கு மதிய உணவு அளித்து வருகிறோம். உணவுகளை நான் மற்றும் எனது தோழிகள் கனிமொழி, பவித்ரா மூன்று பேர் மட்டும் நேரடியாக வினியோகம் செய்கிறோம்.



சாம்பார் சாதம், தக்காளி சாதம், புளிசாதம் போன்ற கலந்த சாதங்களும் சில வேளை குழம்புடன் கூடிய சாதங்களும் வழங்குகிறோம். நமது வீட்டில் எப்படி செய்து தருவோமோ அதே போல சுகாதாரமான முறையிலும், அன்றன்று காய்கறிகள் வாங்கி செய்தும் உணவுகளை சமைக்கிறோம். வில்லிவாக்கம் இ.சி.ஐ சர்ச் அருகில் நமது இடத்தில் சமையல் பணிகளை மேற்கொள்கிறோம். 

இதனையடுத்து ஆதரவற்ற குழந்தைகளுக்காக திருநின்றவூரில் நத்தம்மேடு என்கிற பகுதியில் எனது சொந்த இடத்தில், குழந்தைகளுக்காக  அறத்தின் அகம் என்றொரு இல்லம் எழுப்பி அதில் அவர்களுக்கு தேவையான வற்றை செய்து தந்து அவர்களைப் பார்த்துக் கொள்ளலாம் என பணிகளை மேற்கொண்டு வருகிறேன். 


இதற்கு என்னுடைய பொன், பொருள் அனைத்தையும் செலவு செய்தது மட்டும் அல்லாமல் பலருடைய பங்களிப்பினாலும் இதனை செய்து வருகிறேன்.  நீங்களும் இதற்கு உதவ விரும்பினால் செய்யலாம். உங்களது ஒவ்வொரு ரூபாயும் சரியான முறையில் இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்படும். 

எப்பொழுதுமே நாங்கள் வெளிப்படையாக இயங்கி வருகிறோம். எங்களுக்கு கிடைக்கும் உதவியின் தகவல்கள், செய்யும் பணிகளை வீடியோக்கள் வடிவில் சமூக ஊடக தளங்களில் உடனுக்குடன் பதிவிட்டு வருகிறோம். இதனைப் பார்த்து வில்லிவாக்கம் மட்டும் அல்லாது உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் உதவியும் தொடர்ந்து எங்கள் அறக்கட்டளைக்கு கிடைத்து வருகிறது. 


முதலில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் உணவு தரலாம் என 2017ல் ஆரம்பித்தோம். பிறகு  2018ல் இருந்து தொடர்ந்து அனைத்து நாட்களும் தந்து கொண்டிருக்கிறோம். 150 முதல் 1000 நபர்கள் வரை நாங்கள் உணவு தருகிறோம். பண்டிகைக்காலங்களில் பிறர் உதவிகளின் மூலம் துணிகள், போர்வைகள் போன்றவற்றையும் வழங்கி வருகிறோம்.

நான் பத்தாவது படிக்கும்பொழுது தந்தை கேன்சர் நோய் பாதிப்பால் இறந்து விட்டார். பிறகு அம்மா பட்ட கஷ்டங்கள் ஏராளம். நான்  அப்பொழுது சரிவர உணவு இல்லாமல், உறைவிடம், உடை இல்லாமல் பட்ட சிரமங்களை மனதில் கொண்டு இப்பணிகளை மேற்கொண்டு வருகிறேன். இப்பொழுது எனது பிசினஸில் கிடைக்கும் பணம் உட்பட பிறர் உதவிகளையும் சேர்த்து என்னால் இயன்றவற்றை செய்து வருகிறேன். 

எனது இந்தப் பணியில் எனக்கு துணையாக இருப்பது பவித்ரா, கனிமொழி எனும் தோழிகள் ஆவர். நான் படிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு மாபெரும் துணையாகவும் உதவிகளும் செய்த வந்த இவர்கள் இன்று இந்த அறக்கட்டளையிலும் தூணாக துணையாக விளங்குகிறார்கள்.

நல்ல நண்பர்கள், உறவினர்கள் மூலமாக கடவுள் நம்மை கைவிடமாட்டார் என்பதற்கு இதுவே சான்று. நமது எண்ணங்களும் செயல்களும் சரியானதாக இருந்தால் நாம் வாழ்வில் வெற்றி பெறுவோம் என தெரிவித்துக் கொள்கிறோம்.














தொடர்புக்கு :