40 வருடங்களுக்கு ஒருமுறை தரிசிக்க முடிகிற அத்திவரதரை பல்வேறு விதமான அனுபவங்களுடன் தரிசனம் மேற்கொண்ட நமது வாசகர்களிடம் அவர்களது அத்தி வரதர் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு கொளத்தூர் மெயில் வாட்ஸப் ஸ்டேட்டஸில் அழைப்பு விடுத்திருந்தோம். அதற்கு விருப்பம் தெரிவித்த நமது சில வாசகர்களின் அனுபவங்கள் இதோ!
பிரசன்னா, பிரவீன்
சீனிவாசா நகர், கொளத்தூர்
நள்ளிரவு 2.30 மணிக்கு பைக்கில் கொளத்தூரில் இருந¢து கிளம்பி அதிகாலை 4.30 மணிக்கு காஞ்சிபுரத்தை அடைந்தோம். அந்த நேரத்திலும் மாபெரும் மக்கள் வௌ¢ளம் இருந்தது. பைக் பார்க் செய்ய சிரமப்பட்டு ஒரு இடம் கண்டுபிடித்தோம். 5 மணிக்கு தரிசன வரிசையில் நின்றோம். உள்ளூர் மக்கள் பலர் ஆங்காங்கே நீர்மோர், காலைச் சிற்றுண்டிகள் வழங்கியதைக் காண முடிந்தது. காலை சுமார் 10 மணியளிவில் அத்திவரதர் தரிசனம் கிடைத்தது. ஒருமுறை கண்டு நிறைவுறாமல் சிலநாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை சென்று நின்ற கோலத்திலும் அத்திவரதரை தரிசித்தோம்.
பரிமளா
விவேக் நகர், கொளத்தூர்
நான் எனது கணவர், எங்கள் குடும்ப நட்பு மூவரும¢ இரவு 2 மணிக்கு கிளம்பி 3.15க்கு காஞ்சிபுரத்தை அடைந்தோம். 3.45க்கு வரிசையில் நிற்க ஆரம்பித்து காலை 11 மணிக்கு அத்திவரதர் தரிசனம் பெற்றோம். 4 மணிக்கு சென்னை வந்தடைந்தோம். உட்கார இடம் இல்லாத வசதிக்குறைவைத் தவிர்த்து, அவ்வளவும் நேரம் வரிசையில் நின்ற வலி எல்லாம் அத்திவரதர் தரிசனம் பெற்ற உடன் மறைந்தது. நிறைவான திருப்தியுடன் மீண்டும் வீடு வந்தோம்.
டாக்டர் சங்கீதா
சுவாமி நகர், கொளத்தூர்
நான் எனது மகன்களுடன் சென்றிருந்தேன். நாங்கள் சென்ற அன்று விஐபி வரிசையில் அவ்வளவு கூட்டம் இல்லாததால் 15 நிமிட நேரத்திலேயே தரிசனம் கிடைத்தது. துளசி தீர்த்தம் நறுமணம் முதற்கொண்டு வித்யாசமான அனுபவம். வரதா என்றால் அனைத்து வரத்தையும் தா என நாம் கேட்கக் கூடியவர். பிரம்மர் அத்திவரதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு. அத்திவரதர் பாதம் முதல் உச்சி வரை மிகத் தெளிவாக தெரிந்தது. பிரம்மாண்டமான அமைப்பில் நிறைவான தரிசனம் எங்களுக்கு கிடைத்தது. இன்னும் அந்த பிரமிப்பு நீங்கவில்லை. மீண்டும் எனக்கு இந்த வாய்ப்பு வருமா தெரியவில்லை. ஆனால் எனது மகன்களது தலைமுறைக்கு இது நீங்கா நினைவாக இருக்கும்.