நான் சென்னையை அடுத்த பாடி அருகில் மண்ணூர்பேட்டை கிராமத்தில் 1942ம் வருடம் விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். மிக அருகில் இருந்த ஒரே உயர்நிலைப்பள்ளி வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை உயர்நிலைப்பள்ளியில் பயின்றேன். பின்னர் 1962 ஆம் ஆண்டு இந்திய வான்படையில் சேர்ந்து 15 வருடங்கள் சீரிய பணியாற்றினேன். இருபெரும் போர்களை சந்தித்தேன். 1971ல் ஜலந்தர் ஏர் பேஸில் கடும் தாக்குதலில் புனர் ஜென்மம் பெற்றேன். பின்னர் வடகிழக்கில் கவுகாத்தியில் கரடுமுரடு, காடு, மலை, மிகப்பெரிய நதியான பிரம்ம புத்திராவின் ஓர் கோடியில் பணியாற்றினேன். அதற்காக பதக்கமும் தந்தார்கள்.
1978ல் புதிய வாழ்க்கையை சென்னை துறைமுகப் பகுதியில் எஃப்.சி.ஐயில் சேர்ந்தேன். 25 வருடங்கள் கப்பல் இறக்குமதி பல லட்சம் டன் உணவு தானியம் இறக்குமதி அல்லும் பகலும் என ஷிப்ட் முறையில் உழைத்தேன். 1985 வாக்கில் டீச்சர்ஸ் காலனியில் இருந்த 30 பேரில் நானும் ஒருவன். அப்போது தெருவிளக்கும் பேருந்து வசதியும் கிடையாது. இன்றைய இன்னர் சுற்றுவட்டப்பாதை 1990, 92 வாக்கில் உதயம் ஆனது. பின்னர் படிப்படியாக அக்கம் பக்கம் நகரங்கள் பெருகின. மக்கள் தொகை பெருகப் பெருக வசதிகள் பெருகின. பெரிய பெரிய பாலங்கள், விளக்குகள், போக்குவரத்துகள் என பெருகின.
இவ்விடத்தின் மிக அருகில் தேசிய நெடுஞ்சாலைகள் நாற்புறமும் சூழப்பட்டதால் கடந்த 25 வருடங்களில் போட்டா போட்டிகளில் இடங்கள் விற்கப்பட்டதாலும், மாதவரம் நகராட்சியாக மாறியதாலும் மென்மேலும் வளர்ச்சிகள் கண்டது. எங்கள் இருப்பிடத்தில் ஸ்ரீ பவானி அம்மன் ஆலயம், பிரதிஷ்டை ஆன காலம் முதல் எனக்கு ஈடுபாடு.
பாரதியாரின் கனவுகளில் பெண்களின் மேம்பாடு ஓர் முக்கிய அம்சம். கல்விகள் பெருகின. கணிணிமயம் வெகுவாக கவர்ந்தது. செல்லிடைப் பேசிகள் வளர்ந்தன. தொழிற்கூடங்களில் உரிமை அதிகம் காணும் மக்களைப் பார்க்கிறேன். மக்களின் சராசரி வருமானம் உயர்வானது. எனவே மண்ணும், பொன்னும் தானாகவே விலையேறின.
குளங்கள் நிறைந்த குளத்தூர் கொளத்தூர் என மறுவியது. பெயருக்கு ஏற்ப, கொளத்தூரில் வண்ண மீன்கள், தொட்டிகள் என அமோக விற்பனையில் உள்ளார்கள்.
எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு இதுவே என் வாழ்நாளின் தத்துவம்.. என் பணிகள் தொடரட்டும், தொடரப்படவேண்டும்.
கொளத்தூர் மெயில், செப் 2017 இதழில் பிரசுரமான கட்டுரை