இன்று கபசுரக்குடிநீர் அனைவராலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. எந்த அளவிற்கு இதில் உண்மைத்தன்மை இருக்கிறதோ, மிகைப்படுத்துதலுக்கும் குறைவில்லை.
இம்மருந்து இன்று நேற்று கண்டறியப்பட்டதல்ல. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சித்தர்களின் குறிப்புகள் உள்ளன. இன்றளவும் சளி, இருமலுடன் கூடிய காய்ச்சல், இளைப்பு போன்ற நோய்களுக்கு சிறந்த குணம் அளிக்கக் கூடிய மருந்து.
பன்றிக்காய்ச்சல் ஏற்பட்ட கால கட்டத்தில் இம்மருந்தை பயன்படுத்தி நல்ல பலன் கண்டதைத் தொடர்ந்து நவீன ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நோய் கிருமிகளை எதிர்க்கும் தன்மை, நோய் தடுப்பாற்றலை மேம்படுத்தும் தன்மை, சுரத்தையும், வலியையும் போக்கும் தன்மைகள் கொண்டதாக ஆய்வுக் கட்டுரை 'International Journal of Current and Advanced Research' என்னும் இதழில் வெளியிடப்பட்டது.
இந்த குடிநீரில் நிலவேம்பு, சீந்தில், சுக்கு, ஆடாதோடை, வட்டத்திருப்பி போன்ற 15 மருந்துப் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இவ்வாறிருக்க Covid - 19 நோய்க்கிருமி தொற்றை தடுக்கும் அல்லது அழிக்கும் என்று எந்த சித்த மருத்துவ குறிப்புகளோ, ஆய்வுகளோ இருப்பதாக தெரியவில்லை.
இது நாம் வீட்டில் பயன்படுத்தும் துளசி கஷயாமோ, மிளகு கஷாயமோ அல்ல. இந்த குடிநீரை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வதே உகந்த ஒன்று.
குடிநீர் என்பது சுருக்கிக் குடிப்பது, சாதாரணமாக 8ல், 1ஆக (அ) 4ல் 1 ஆக வற்றவைத்து குடிக்க வேண்டும்.
ஆனால் சிலருக்கு 2ல் 1ஆக (அ) 3ல் 1 ஆக அவரது உடல்நிலை, நோய்நிலை பொருத்தும் வயதிற்கேற்ப மருந்தினளவும் மாறுபடும். உதாரணமாக 2-5 வயதுடைய குழந்தைகளுக்கு நாளொன்றிற்கு 5 மில்லி மட்டுமே கொடுக்க வேண்டும்.
இரண்டாவதாக, மருந்து சரக்குகள் கிடைப்பதிலுள்ள சிரமம். உதாரணமாக 'வட்டத்திருப்பி' இது பொன்முசுட்டை கொடியின் வேர். இது மலைப்பகுதிகளில் மட்டுமே கிடைக்ககூடிய ஒன்று.
அளவிற்கு அதிகமாக பயன்படுத்துவதால் மருந்திற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
COVID - 19 நோய் பரவாமிலிருக்க நம் அரசு மற்றும் சுகாதாரத் துறை எளிமையான 3 விஷயங்களை பரிந்துரைத்துள்ளது.
1. வீட்டில் இருப்பது,
2. வெளியில் சென்றால் சமூக இடைவெளி கடைபிடிப்பது
3. அடிக்கடி கைகளை கழுவுவது
இதில் என்ன சிரமம்? இதைக் கடைபிடிப்பதில் எதற்கு மெத்தனம்?
'கபசுரக்குடிநீர்' நிச்சயமாக இதற்கான மாற்று கிடையாது. அன்றாட பழக்க வழக்கங்களிலும், நம் உணவு முறையிலும் சிறிய மாற்றங்களை கடைப்பிடித்தாலே நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த முடியும். இதனை மற்றுமொரு தனி பகிர்வாக உங்களிடம் பகிர்கிறேன்.
Dr.V.பபிதா B.S.M.S., M.Sc Varma
மாருதி சித்தா கிளினிக்
கொளத்தூர், பெரவள்ளூர்